×

மாய பெட்டி என கூறி ரூ.50 கோடிக்கு விற்க முயற்சி: லாரி டிரைவர் உள்பட 4 பேர் கைது

திருமலை: பணம் கோடி கோடியாக குவியும் மாய பெட்டி என்று கூறி ரூ.50 கோடிக்கு விற்க முயன்ற லாரி டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜனகாமா மாவட்டம், பெம்பர்ட்டி ஒய் சந்திப்பில் எஸ்ஐ ஸ்ருஜன், மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு ஆட்டோவில் வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் ஆட்டோவை திருப்பி கொண்டு சென்றனர்.

சந்தேகமடைந்த போலீசார் விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். ஆட்டோவில் ஒரு பழைய இரும்பு பெட்டி இருந்தது. மேலும் ஆட்டோவில் இருந்த 4 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம், முன்னனூர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சங்கர், நாராயன்பேட்டை மாவட்டம், சங்கம்பண்டாவை சேர்ந்த சிக்கன் வியாபாரி காசிம், விகாராபாத் மாவட்டம், தண்டூரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் அசார், நல்கொண்டா மாவட்டம், திண்டிதேவதல்லி தாண்டாவை சேர்ந்த காசிராம் என்பது தெரிய வந்தது. இவர்கள் தற்போது ஐதராபாத் ஹயத் நகர் பஞ்சாரா காலனியில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் செய்யும் வேலையில் போதிய வருமானம் இல்லாததால் குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்க முடிவு செய்தனர். இதற்காக புராதன பொருட்கள் விற்கும் கடையில் பழைய இரும்பு பெட்டியை வாங்கினர். அந்த பெட்டி, இடி, மின்னலுடன் வானில் இருந்து விண் கற்கள் போல் விழுந்தது. இந்த பெட்டி அதீத சக்தி கொண்டது. இந்த பெட்டியை வைத்திருப்பவர்களுக்கு பணம் கோடிகளில் கொட்டும் என தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறியுள்ளனர். இந்த தகவல் காட்டுத்தீயாக சுற்றுவட்டாரங்களில் பரவியது. இதையடுத்து வாரங்கல்லை சேர்ந்த ஒருவர், இந்த பெட்டியை வாங்க முடிவு செய்தாராம். அவரிடம் இந்த பெட்டியை காண்பிக்கவும் இதை ரூ.50 கோடிக்கு விற்பனை செய்யவும் ஆட்டோவில் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் நேற்று கைது செய்தனர். இதுபோல் வேறு யாரிடமாவது மோசடி செய்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மாய பெட்டி என கூறி ரூ.50 கோடிக்கு விற்க முயற்சி: லாரி டிரைவர் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Rs ,Janakama District, Telangana State, SI Srujan ,Pemberty Y ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு